Monday 5 August 2013

'கவலை (இல்லாத) மனிதன்' J.P.சந்திரபாபு


ஆக. 05 தமிழ் திரை உலகின் பல துறைகளில், உச்சம் தொட்ட கலைஞனின் பிறந்த நாள் இன்று...


இசை:- இசை துறையை பொறுத்தவரை மேற்கத்திய பாணி பாடல்கள் பாடுவதில் தமிழ் திரை உலகின் முன்னோடி இவர். இன்றைய குத்து பாடல்களின் முன்னோடியான 'பாய்லா' பாடல்களின் துவக்கமும் இவரே.
நடனம்:- இன்று இந்தியாவின் 'மைக்கேல் ஜாக்சன்' என்று போற்றப்படும் பிரபுதேவா, இவரின் நடன அசைவுகளையும், மேனரிசங்களையும் பின்பற்றிதான் புகழடைந்தார் என்பதை பிரபுதேவாவினாலும் மறுக்க முடியாது. (இனிமேல் பிரபுதேவாவை 'இந்தியாவின் சந்திரபாபு' என்று அழைத்து கொள்ளுங்கள்)
நடிப்பு:- M.R.ராதாவின் நடிப்பை விவேக்கும், நாகேஷ் நடிப்பை வடிவேலுவும், கவுண்டமணி நடிப்பை சந்தானமும் காப்பி அடித்து வெற்றிபெற முடிந்தது. ஆனால் இவருடைய இடத்தை நிரப்ப மற்ற எந்த நடிகராலும் இன்றுவரை இயலவில்லை. (லூஸ் மோகன், சார்லி முதல் சாப்ளின் பாலு வரை முயற்சித்து தோற்றவர் லிஸ்ட் அதிகம்)

தமிழ் திரையிசை மேடை கச்சேரிகளில் இன்றும் தவிர்க்க முடியாத அங்கம் சந்திரபாபுவின் குரல். (T.M.S. குரலை வெறுப்பவரும் உண்டு. சந்திரபாபு குரலை வெறுக்கும் மேடை கச்சேரி ரசிகர் எவரும் கிடையாது)

இப்பேர்ப்பட்ட மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஏதாவது ஒரு டிவி-யில் சிறப்பு நிகழ்ச்சி இருக்கும் என்று காலையிலிருந்து சானல்களை மாற்றி மாற்றி பார்கிறேன், கடைசில ஒருத்தனும் கண்டுகிடலன்னு புரிஞ்சுகிட்டேன்.

நாமாவது முகநூலில் ஒரு பதிவிடலாம் என்று தீர்மானித்து, 'கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில்' தகவல் தேடலாம்னு போய் பார்த்தால், அங்கு முதல் வரி 'ஜோசப் பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரை பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர்' என்றிருக்கிறது. ஆனால் J.P.ரோட்ரிக்ஸ் (ஜோசப் பிச்சை ரோட்ரிக்ஸ்) என்பது சந்திரபாபு அவர்களின் தந்தையார் பெயர் என்பதும் சந்திரபாபுவின் இயற்பெயர் 'பனிமயதாசன்' என்பதுதான் உண்மை. ஆக.05 தூத்துக்குடி 'பனிமய மாதா' திருவிழா என்பதால் பெற்றோர் அந்த பெயரை சூட்டினர். விக்கிப்பீடியாவில் இருப்பதுதான் இறுதி உண்மை என்று நம்புகின்ற 'அறிவாளிகள் யுகத்தில்' இப்படியான அஜாக்ரதைகள் எதை காட்டுகிறது? (நான் மதிக்கின்ற ஒரு கட்டுரையாளரின் கட்டுரையில், சந்திரபாபுவின் இயற்பெயர் 'மகிமை தாஸ்' என்று எழுதப்பட்டிருந்ததை இன்று பார்த்தேன்)

நடிக்கவே தெரியாதவன், ஓவரா நடிக்கிறவன், சொந்த வாழ்க்கையில் அயோகியனாகவே வாழ்ந்தவனுக்கெல்லாம் சிறப்பு நிகழ்ச்சி செய்கிற சானல்கள், தனது திறமையை நிரூபித்து மறைந்த ஒரு கலைஞனை, நல்ல மனிதனை சிறப்பிக்க மறுப்பதன் பின்னணி என்ன?

J.P.சந்திரபாபு ஒருவேளை தமிழ்நாட்டில் சிறப்பிக்கப் பட்டிருக்கலாம்...
சந்திரபாபு மேனன்
சந்திரபாபு நாயர்
சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு ரெட்டி
சந்திரபாபு ஐயர்
சந்திரபாபு அய்யங்கார்
சந்திரபாபு ராவ் கெய்க்வாட்...
இவற்றில் ஒன்றாக இருந்திருந்தால்...

(பி.கு:- கப்பலோட்டிய தமிழர் என்று தமிழினத்தால்(இந்தியர்களால்) கொண்டாடப்பட வேண்டியவர் சந்திரபாபுவின் தந்தை J.P.ரோட்ரிக்ஸ். அவருக்கும் இதே சதி வரலாறு பொருந்தும்)

No comments:

Post a Comment