Saturday 2 June 2012

மீனவ மக்கள் சொல்லப்படாத கதை [ பாகம்-8 ]


"கீழ்த்திசை நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரிலும் இம்முத்துக்குளித்துறையைச் சேர்ந்த மக்களே  மிகவும் சிறந்தவர்கள்" -பல்தார்-டி-கோஸ்தா.


போர்ச்சுக்கீசியர்கள் மூர்களிடமிருந்து  தூத்துக்குடியை கைப்பற்றியதிலிருந்து  அவர்களின் முக்கிய குடியேற்றப் பகுதியாக இருந்தது புன்னைக்காயல் (1) தான் .அங்கு அவர்கள் ஒரு மண்கோட்டையை அமைத்துக் கொண்டனர். 1582  - வரை புன்னைக்காயலுக்கு இருந்த முக்கியத்துவம் தூத்துக்குடிக்கு இல்லை.

இந்தியாவுக்கு வந்த போர்ச்சுக்கீசியர் சுமார் ஐம்பது ஆண்டுகள்  புன்னைகாயலையே தங்களின் முக்கிய குடியேற்றப் பகுதியாக வைத்திருந்தனர்.  புன்னைக்காயல் முக்கிய குடியேற்றப் பகுதியாக இருந்த போதிலும் அது தூத்துக்குடியைப் போல சிறந்த பாதுகாப்பான இயற்கைத் துறைமுகமாக இருக்கவில்லை.  சோழ மண்டலக் கரைகளிலேயே சிறந்த துறைமுகமான தூத்துக்குடி துறைமுகம் துரதிருஷ்டவசமாக ஆழம் குறைவானதாகவும் சுமார் 60 எடை கொண்ட கொண்ட கப்பல்களை மட்டுமே தாங்குவதாகவும் இருந்தது.  தவிறவும்   தூத்துக்குடி   தண்ணீர்  இல்லாத தூர்ந்து போன இடமாகவும்,  உப்புக் கற்களால் ஆன வாழ்வதற்கு உகந்த இடமாக இல்லாமல் இருந்ததாலும்  போர்ச்சுக்கீசியர்கள்  துவக்கத்தில் புன்னைக்காயலையே தேர்ந்தெடுத்தனர்.   1580  - ல் தூத்துக்குடியை தலைநகரகாக எடுத்துக் கொண்டனர்.

போர்ச்சுக்கீசியர்கள் மூர்களை வென்ற போது காயலில் வாசித்த மூர்கள் காயல்பட்டினத்தில் குடியேறினார்கள். பரவர்கள் புன்னைக்காயலில் குடியேறினார்கள். தூத்துக்குடி தலைநகராக மாறிய பின்னர் புன்னைக்காயல் அதன் போக்கில் முக்கியத்துவத்தை இழந்தது.  சுமார் 125 ஆண்டுகள் அந்தக் கடலோரத்தை ஆட்சி செய்து பின்னர் தூத்துக்குடியை டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்து வெளியேறிய போர்ச்சுக்கீசியர்கள்தான் தென் தமிழக மீனவ மக்களை ஒரு புதிய கலாச்சாரத்திற்கு பழக்கியவர்கள். தங்களின்  முன்னோர்களின்  வழிபாட்டு மரபுகளை விட்டொழித்து புதிய வழிபாடுகளை அவர்களுக்கு பழக்கப்படுத்தியவர்கள் போர்ச்சுக்கீசியர்கள்தான். அந்த வகையில் இன்று வரை போர்ச்சுக்கீசியரின் வரவும் அதையொட்டி தென் தமிழக கடலோரத்தில்  ரோமன்  கத்தோலிக்க சமூகத்தின் உருவாக்கமும் பல்வேறு சாதக பாதங்களை மீனவ மக்களிடையே உருவாக்கியிருக்கிறது.

தென் தமிழகத்தில் கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ள எல்லா கடலோர மீனவ மக்கள் வசிக்கும்  கிராமங்களிலுமே இன்று பிரமாண்ட தேவாலையங்கள் உள்ளன. ஒவ்வொரு தேவாலயமும் பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டவை. பொதுவாக தேவாலயங்கள் திருச்சபையின் பணத்தில் கட்டப்படுவதாக ஒரு பொதுப்புத்தி தமிழக மக்களிடம் உண்டு. பணத்திற்காகவும் கோதுமைக்காகவும் மதம் மாறியவர்கள் என்ற பொதுப்புத்தியைப் போனதுதான் இதுவும். மீனவ மக்களைப் பொறுத்தவரையில் இந்த எண்ணங்களும் முன் முடிவுகளும் உண்மையல்ல.  உள்ளூர்களில் கிறிஸ்தவர்காளாக மாறிய ஏனைய சமூகத்தவர்கள் கட்டும் கோவில்களில் திருச்சபையின்  பங்கு உண்டு. ஏனைய சமூகங்கள் திருச்சபையை ஏற்றுக் கொண்டு வழிபாடுகளில் தவறாமல்  பங்கேற்றாலும் அவர்கள் கோவிலுக்கென்று கொடுப்பதை,  மீனவ மக்கள் தேவாலயங்களுக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிடும்  போது  ஒன்றுமே இல்லை. நிலவுடமைச் சாதிகள்  தேவாலயங்களுக்கு கிள்ளிக் கொடுக்கிறார்கள். நிலமற்ற கடலை மட்டுமே நம்பி வாழும் மீனவர்களோ தங்கள் வருமானத்தில் பெரும் பகுதியை தேவாலயங்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள்.  இப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கரையோர மக்கள் நீண்ட காலமாக பெண் தெய்வ வழிபாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள்  முத்து மாரியம்மன் , ஆவிகள் , பேய் வழிபாடுகளைச் செய்து வந்தவர்கள் . தொழில் உரிமையைப் பாதுகாக்க போர்ச்சுக்கீசியரால் மதமாற்றம் செய்யப்பட்ட போது முதன் முதலாக  தூத்துக்குடியில்  உருவான இராயப்பர் ஆலயம் கூட பரதவ மக்களிடம் செல்வாக்கைப் பெற வில்லை. பின்னர் உருவாக்கப்பட்டதுதான்  மரியன்னையின் ஆலயம்  தமிழகத்தில் உள்ள  கத்தோலிக்க தேவாலயங்களில்  புகழ் பெற்ற தேவாலயங்களாக விளங்குவது, பூண்டி  மாதா ஆலயமும், வேளாங்கண்ணி மாதா ஆலயமும்தான். ஆனால் இந்த இரண்டையும் விட காலத்தாலும் வரலாற்றாலும் மூத்த பேராலயமாக இருந்தது தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம்தான். அதை 16-ஆம் நூற்றாண்டிலேயே இயேசு சபையினர் பேராலயம் என்றும் அகலமான பெரிய கோவில் என்றும்  அழைத்துள்ளனர். அது  தென்னிந்தியாவின் முதல் ஆலயம் மட்டுமல்ல இலங்கை கரையோரங்களில் கத்தோலிக்க மதத்தைத் தழுவிய மக்களுக்கும் தலைமை ஆலயமாக இருந்துள்ளது.


இரக்கத்தின் மாதா
...........................

இன்று தூத்துக்குடியில் தெருவுக்கு தெரு கோவில் உள்ளது. எல்லா கோவில்களிலும் ஆடம்பரத் திருப்பலிகள் நடக்கின்றன. ஆனால் தூத்துக்குடி மக்கள் தாய் கோவில் என்று அழைப்பது பனிமய மாதா ஆலயத்தைத்தான். 1582-ல் தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தைத்தான்  இன்று பனிமயமாதா என்று அனைத்து மக்களும் அழைக்கிறார்கள். முத்துக்குளித்துறை மக்கள் இதை பரதர் மாதா என்றும் முத்துக்குளித்துறைக்கெல்லாம் பாதுகாவலி என்றும், படகின் மாதா என்றும் அழைக்க போர்ச்சுக்கீசியர்கள் தஸ்நேவிஸ் மாதா  (Signora das Nevis)  என்று  அழைத்தனர். உரோமையில் கிபி 352 -ல் எஸ்கலின் குன்றில் உருவான மாதா அலயமே இத்தாலி மொழியில்  ‘’மரியா மஜோரே”  இதுதான் உலகில் உருவான முதல் மரியன்னை ஆலயம். அதனுடைய அடியொற்றியே தூத்துக்குடியில்  பனிமயமாதா ஆலயத்தை அமைத்தார்கள் இயேசு சபையினர்.

இந்த கடலோர சமூகம் எப்படி ஒரு வலுவான கத்தோலிக்கச் சமூகமாக உருவானது என்பதையும் நாம் காண வேண்டும். இடைவிடாத படையெடுப்புகள், தாக்குதல்கள், கொள்ளைகள், சூறையாடல்களால் கடலோரச் சமூகம் தொடர்ச்சியான இடப்பெயர்ச்சிகளைச் சந்தித்தது. இது இயேசு சபையினரும் நெருக்கடியாக இருந்தது. மிகவும் துன்பம் சூழ்ந்த அந்தக் காலத்தில்  கன்னியாகுமரி தொடங்கி சுமார் முப்பது ஊர்களில் வாழ்ந்த மீனவ  மக்களை ஒரு பகுதியில் குடியேற்ற வேண்டிய தேவை இயேசு சபையினருக்கு இருந்தது . உண்மையில்  1542-ல் பிரான்சிஸ் சவேரியார்  இக்கரைக்கு வந்த நாளிலேயே அப்படியான குடியேற்ற முயற்சி நடந்தது. அந்த முயற்சியின்  ஒரு விளைவுதான் யாழ்பாணத்தில் ஒரு குடியேற்றத்தை செய்ய விரும்பியது அது யாழ்பாண மன்னனால் முறியடிக்கப்பட்டது. இந்நிலையில்தான் முப்பது கிராமங்களில் நீளமாக  வங்கக் கடலோரத்தில் வாழ்ந்த பரவர்களை   வைப்பாறு, வேம்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், விரபாண்டியன் பட்டினம், திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய  ஏழு ஊர்களில்  குடியேற்றினார்கள் இயேசு சபையினர். ஆனாலும் இந்த ஒற்றுமை நிலைக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து நாய்க்க மன்னர்கள்,  கயத்தாறு மன்னன், போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களின்  தாக்குதலால் மேற்குக் கரையோரத்திலும், கிழக்குக் கரையோரத்திற்கும் சிதறியோடியதெல்லாம் தனிக் கதை. முப்பது கிராமங்களில் இருந்த மக்களை ஏழு கிராமங்களில் குடியேற்றி ஒட்டு மொத்தமாக ஏழு கடற்றுரைக்கும் ஒரு சாதித் தலைவன் (பட்டங்கட்டியை )உருவாக்கி, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பட்டங்கட்டியை (சாதித் தலைவன் ) உருவாக்கி ஊருக்கு ஊர் கணக்குப் பிள்ளையையும் உருவாக்கி ஒரு குடியேற்றத்தை உருவாக்கினார்கள். இந்த ஏழு கடற்றுறை மக்களுக்குமான ஏக பாதுகாவலியாக உருவாக்கப்பட்டதுதான் பனிமயமாதா ஆலயம்.

1582-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் நாள் கடலோர மக்களுக்கு ஆடம்பரத் திருவிழா மூலமாக அர்ப்பணிக்கப்பட்ட மாதா கோவில் திறப்பு  விழா பற்றி இயேசு சபை அதிபர் தி தாக்குஸ் தி குண உரோமையிலுள்ள இயேசு சபைத் தலைவர் ஆக்குவா லீவா அடிகளாருக்கு  எழுதிய மடலில் ”இது மற்ற ஆலயங்களைப் போல கொச்சி ஆயரின் அதிகாரத்திற்கு உட்படாமல் இயேசு சபையினருக்கே சொந்தமானதாக இருக்கும்.  முத்துக்குளித்துறையிலுள்ள பிற ஆலயங்களை விட இவ்வாலயம் மிக அழகியதும் சிறந்ததும் ஆகும். இவ்வாலயத்திற்காக இதுவரை நாங்கள் 800 குருசாதோ செலவிட்டிருக்கிறோம். இவ்வளவு பணமும் மக்களின் நன்கொடையே ஆகும். எல்லா ஊர்களிலிருந்தும் மக்கள் பெருந்திரளாக தூத்துக்குடிக்கு வந்து ஆலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்கள். இதுவரை காணாத ஆடர்ம்பரச் சிறப்போடும் கோலாகலத்தோடும் விழா நடந்தேறியது. அன்று சுமார்  670 பேர் நற்கருணை உட் கொண்டனர். கிறிஸ்தவ மக்கள் அனைவரும் இவ்வாலயத்தின் மீது தனிப்பற்று வைத்துள்ளனர் “ (8)

இயேசு சபையினர் வந்த சில வருடங்களிலேயே பிரான்சிஸ்கு சபையினரும் வந்து விட்டனர். கோவா மறைமாநிலத்திற்கு கட்டுப்பட்டதாக இருந்த பனிமய மாதா ஆலயத்தை கொச்சி மறைமாநிலத்தோடு இணைப்பதை இயேசு சபையினர் விரும்பவில்லை. பெரும் செல்வம் கொழிக்கும்  தேவலயத்திற்காக கொட்டிக் கொடுக்கும் இந்த சன சமுத்திரத்தை இயேசு சபையினர்  இன்னொரு சபைக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. மேற்கண்ட கடிதத்திலும் இந்த தொனி தெரிகிறது.  பனிமய மாதா  ஆலயத் திறப்பு விழா பற்றி இயேசு சபை பார்வையாளர் நூனஸ் ரொட்ரீக்ஸ் என்பவர் இயேசு சபைத் தலைவருக்கு 1582- டிசம்பர் 30-ஆம் நாள் கொச்சியிலிருந்து எழுதிய மடலில் ‘’  இந்தக் தேவாலயமானது இந்த மக்களின் நன்கொடையிலிருந்து உருவானது.அதனைக் கட்டியெழுப்ப 700 குருசாதோ அளவுக்குச் செலவாகியது. அது மட்டுமன்றி விலையுயர்ந்த ஆபரணங்களும் திருவுடைகளும் இங்கு ஏராளமாக இருக்கின்றன. திருநாள் அன்று பரத மக்கள்  மருத்துவமனைக்கென்று 200 குருசாதோக்களைக் கொடுத்தார்கள். இப்புதிய ஆலயம் சுண்ணாம்பாலும்செங்கற்களாலும் கட்டப்பட்டது. ஆலயத்தின் பீடப்பகுதி கனரா ஓடுகளால் ஆனது என்றும்,  ஆலயத்தில் உள்ள சக்றீஸ்தியில் (திருப்பலி ஒப்புக் கொடுக்கிற பலிபீடம்) திருவழிப்பாட்டிற்கு தேவையான அழகிய ஆபரணங்களும் புனிதரின் திருப்பண்டங்களும் ஏராளமிருந்தன” (9)

திருவிழாக்களில் முத்தும் பவளமும் கொட்டிக் கொடுக்கப்பட்டன. ஆடம்பரமான திருவிழா நடத்துகிற கலாச்சாரம்  ஒரு போட்டியாகவே வளர்க்கப்பட்டது. மணப்பாட்டில் நடத்தப்பட்டது போன்ற வாணவேடிக்கையை தூத்துக்குடியில் நடத்த வேண்டும். என்ற போட்டி ஒரு ருசுவாக உருவாக்கப்பட்டது ஏழு கற்றுறைகளிலும் தனித் தனி தேவாலயங்கள் உருவாக்கப்பட்டு இந்த ஆடம்பர விழாக்கள் இயேசு சபையினரால் ஒரு பொதுப்பண்பாடாக உருவாக்கப்பட்டது. ஏனைய ஊர்களின் திருவிழாவை விட தூத்துக்குடி  பனிமய மாதா கோவில் ஒட்டு மொத்த பரவர்களுக்கும் தலமைக் கோவிலாக உருவாக்கப்பட்டது. 1600-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விழாவை முத்துக்குளித்துறை முழுமைக்குமான திருவிழாவாக நடத்தினார்கள். இந்த விழாவுக்கு கோவா இயேசு சபையின் மாநிலத் தலைவர் அருட்தந்தை நிகோலாஸ் பிமெந்தா அழைக்கப்பட்டிருந்தார். பெரும் ஆடம்பர விழாவாக நடத்தப்பட்ட அந்த விழாவில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்ததாக  இயேசு சபை குறிப்புகள் பெருமையோடு குறிப்பிடுகிறது. பட்டங்கட்டிகள் எனப்படும் பரவ சாதித் தலைவர்களுக்கு இயேசு சபையினர் விருந்து வைத்தனர் அந்த விருந்தில் பட்டங்கட்டிகள் மாநில இயேசு சபைத் தலைவரோடு அமர்ந்து உணவு உண்டார்கள். ஏராளமான பரிசுகளை பட்டங்கட்டிகளும் பரவச் சாதி பிரமுகர்களும் இயேசு சபையினருக்கு வழங்கினார்கள் தேவாலயமும் இயேசு சபையும் செல்வம் கொழிக்கும் இடமாக மாறிப் போனது தேவாலயங்களில் வெளிப்பட்ட ஆடம்பரமும், பகட்டும், இயேசு சபையினர் சர்வ செல்வாக்கோடு வலம் வந்ததும் பிற சபையினருக்கும் இயேசு சபையினருக்குமான முரண்பாட்டை வளர்த்து விட்டது.ஒரு கட்டத்தில் போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாகத்தைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இயேசு சபையினரின் சில நடவடிக்கைகள் அமைய இதை கொச்சி மறைமாநிலமோ, போர்ச்சுக்கீசிய தளபதிகளோ விரும்பவில்லை. கடந்த அத்தியாயத்தில் போர்ச்சுக்கீசிய தளபதிகளே பரவர்களைத் தாக்கிய கயத்தாறு மன்னனுக்கு குதிரை விற்று லாபம் பெற்றதைப் படித்தோம். இப்படியான முரண்பாடுகள் வளர இயேசு சபையினரும் ஒரு காரணமாக அமைந்தனர்.

1603- ல் மீண்டும்  நாயக்கப்படைகள்  தூத்துக்குடியைத் தாக்கி  மக்களிடம்  அநியாய வரிகேட்டனர். அவர்கள் கிறிஸ்தவ மீனவர்களைத் துன்புறுத்தி அவர்களின் வதிவிடங்களை தீயிட்டுக் கொளுத்தி தேவாலயத்தை கொள்ளையடித்தனர். சுமார் 18 நாட்கள் நடந்த இத்தாக்குதலின் பின்னர் அவர்கள் இயேசு சபை தலமை இல்லத்தின் பொருளாளராக இருந்த  அருட்தந்தை கஸ்பார் தாப்ரோவைக் கைது செய்து அவரைப் பிணைக்கைதியாக மதுரைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இத்தாக்குதலில் வெறும் கிறிஸ்தவ பரவர்கள் மட்டுமன்றி தூத்துக்குடியில் வாழ்ந்த பிற இன மக்களும் பாதிக்கப்பட்டதாக வெனன்ஜியூஸ் எழுதியுள்ளார்.  பின்னர்  ஏழு கடற்றுறை பட்டங்கட்டிகளும் கூடி  சிவந்தி நாதப்பிள்ளை என்னும் அதிகாரியை தூது அனுப்பியும் கயத்தாறு மன்னன்  பிடிவாதம் செய்ய மீண்டும் அவர்கள் தூத்துக்குடியையும் ஏழு ஊர்களையும் விட்டு முயல் தீவுக்கு குடியேறினார்கள்.  (10)

தூத்துக்குடி, வேம்பாறு, வைப்பாறு, புன்னைக்காயல் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த சகல  இன மக்களுமாக சுமார் பத்தாயிரம் பேர்  ராஜதீவு எனப்படும் முயல் தீவில் குடியேறினார்கள். குடியேறிய மக்களுக்காக அங்கு நீர்த்தேக்கங்களும் கட்டப்பட்டன. இயேசு சபையினர் பதினாறு அறைகளைக் கொண்ட  புதிய தலைமை இல்லத்தை முயல்தீவில் கட்டிக்கொண்டனர்.  தீவைச் சுற்றி ஒரு மதிற்சுவரையும் எழுப்பிக் கொண்டனர். எதிரிகளின் தாக்குதலில் இருந்து தங்களைக்காத்துக் கொள்ள இயேசு சபை இல்லத்தைச் சுற்றி மூன்று பாதுகாப்பு அரண்களையும் அமைத்துக் கொண்டனர். தப்பியோடி  குடியேறிய இடத்தில்  ஒரு  தேவாலயத்தையும்  கட்டி ஆடம்பர திருவிழாவையும் நடத்தினார்கள் .(11) .

ரோமன் கத்தோலிக்கர்களாக மாற்றப்பட்டதோடு போர்ச்சுக்கீசிய குடிமக்களாகவும்  அறிவிக்கப்பட்ட இம்மக்களை பங்கிட்டுக் கொள்வதில் போட்டி நடந்ததே தவிற பாதுகாப்பதற்கு எவரும் இல்லை.  என்பதையே 16,17 ஆம் நூற்றாண்டின் தொடர் நிகழ்வுகள் நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.  இவர்களை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக போர்ச்சுக்கீசிய சபைகளுக்கிடையேயும் மோதல் இருந்து வந்ததை நாம் ஏற்கனவே படித்தோம்.  இந்த முரண் பாடுகள்  இரண்டு  விதமாக உருவாகியிருந்தது. ஒன்று போர்ச்சுக்கீசிய அரசு அதிகாரிகளுக்கும் இயேசு சபை பாதிரிகளுக்குமான முரண்,  இயேசு சபையினருக்கும் பிரான்சிஸ்கு உள்ளிட்ட ஏனைய  சபையினருக்குமான முரண் என்பதாக இருந்தது.  தங்களின் பாதுகாப்புக்காக போர்ச்சுக்கீசியர்கள் ஒரு கோட்டையை  தூத்துக்குடியில் அமைக்க விரும்பினார்கள் ஆனால் அதை  இயேசு சபையினர்  விரும்பவில்லை.  இந்த முரண்பாடுகளுக்கிடையில்தான் நாயக்க மன்னரின் படைகள் பரவர்களைத் தாக்கினார்கள்.  இப்படியான தாக்குதல்கள் தொடர்ந்து நடந்த போதெல்லாம் போர்ச்சுக்கீசியர்களும் இயேசு சபையினரில் பெரும்பாலானோரும் பரவர்களை விட்டு தப்பியோடினார்கள்.

முயல் தீவில் மக்கள் குடியேறியதால்  முத்துக்குளிக்கும் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டதாலும்  கிறிஸ்தவ மறைப்பரப்பலில் பெரும் பாதங்களை இந்த இடப்பெயர்ச்சி தோற்று விக்கும் என்றும் கருதிய பிரான்சிஸ்கு சபையின் கொச்சி ஆயரான   ஆந்திரேயாஸ் மக்களை  தூத்துக்குடிக்கு திரும்ப வருமாறு அழைத்தார்.  அவர்  மனுவேல் தி எல்விஸ் என்ற தலைமைக்குருவை முயல் தீவுக்கு அனுப்பினார் அனால் இயேசு சபையினரும் மக்களும் தூத்துக்குடி திரும்ப மறுத்தனர். ஆயர் அந்திரேயாஸ் கயத்தாறு மன்னனோடும், மதுரை நாயக்கரோடும் சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு கோவா, கொச்சியிலிருந்து நான்கு பெரிய கப்பல்களில் ஆயுதம் தாங்கிய தோணிகளோடு  வந்து முயல் தீவை முற்றுகையிட்டார். இந்தப் போர் சுமார் 22 நாட்கள் நீடித்ததாக  கோவாவுக்கு எழுதப்பட்ட இயேசு சபை கடிதங்கள் தெரிவிக்கின்றன.  பிரான்சிஸ்கு சபை திரட்டிய படைக்கு ஸ்கோ தி மெனசஸ் என்கிற தளபதி தலைமை தாங்க , பரவர்களின் படைக்கு இயேசு சபை இயேசு சபைத் துறவியான ஜான் போர்கஸ் தலமை தாங்கி இந்தப் போர் நடந்தது. ஒரு பழங்குடிச் சமூகத்தோடு நவீன ரக ஆயுதங்களைக் கொண்ட போர்ச்சுக்கல் படையினர் மோதினார்கள். முயல் தீவை சுற்றி எழுப்பப்பட்டிருந்த கோட்டை மதிற்சுவர்கள்  பீரங்கிகளால் பிளந்து அகழப்பட்டன. . இந்த போர் துவங்குவதற்கு பல நாட்கள் முன்பே முயல் தீவுக்கு குடி நீர், உணவு பொருட்கள் செல்வது யாவும் தடுக்கப்பட்டது. பல நாள் உணவில்லாமல் மக்கள் சோர்ந்து போன பின்னர் போர்ச்சுக்கீசியர் தாக்குதலைத் தொடுத்தனர். இயேசு சபையினரின் கட்டிடங்கள், தேவ மாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்தும் அழிக்கப்பட்டன. பல நூறு பேர் இந்தப் பொரில் கொல்லபப்ட்டார்கள். துரதிருஷ்டவசமாக இயேசு சபைக் குருக்கள் கரையோரம் வழியே இலங்கையின் மன்னார் உள்ளிட்ட தீவுகளுக்குத் தப்பிச் சென்றார்கள். கைவிடப்பட்ட மக்களோ தூத்துக்குடிக்கு திரும்பி வந்தார்கள் இயெசு சபையினரின் சகல இல்லங்களும் பிரான்சிஸ்கு சபையினரால் கைப்பற்றப்பட்டது. பழைய இராயப்பர் ஆலையத்தை அங்கு தலைமை குருவாக அனுப்பப்பட்ட மனுவேல் தி எல்விஸ் எடுத்துக் கொண்டர் .

இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு  தொடர்ந்து நாயக்க மன்னர்களால் பரவர்கள் தாக்கப்பட்ட போது வலிவற்றிருந்த போர்ச்சுக்கீசியர்கள் மக்களை அப்படியே விட்டு விட்டு மன்னார், யாழ்பாணத் தீவுகளுக்கு தப்பியோடினார்கள். அங்கிருந்த படி திருநெல்வேலி, இராமநாதபுரம் பகுதிகளுக்கு கப்பல்களை அனுப்பி நாயக்கர்களின் வருமானம் வீழ்ச்சியடைகிற அளவுக்கு அவர்களை ஒழித்துக் கட்டுகிற அளவுக்கு இயல்பமைதியைக் குலைத்தனர். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்ட மதுரை நாயக்கன் போர்ச்சுக்கீசியர்களை வருந்தி மீண்டும் வருமாறு அழைத்ததாக தனது முத்துக்குளித்தல் வரலாறு  நூலில் குறிப்பிடுகிறார்  எஸ். அருணாச்சலம்.

கொச்சி ஆயரின் தாக்குதலில் மனமுடைந்து போன இயேசு சபையினர் அதிகார பூர்வமாக தூத்துக்குடியை கொச்சி ஆயரிடம்  1609  -ல் ஒப்படைத்து தூத்துக்குடியை விட்டு  வெளியேறினார்கள்.இலத்தீன் வழிபாட்டு முறைகள் நீக்கப்பட்டு சிரியன் வழிபாட்டு முறைகளை பிரான்சிஸ்கு சபையினர் அறிமுகம் செய்தனர். ஆனால் அவைகள் பரவர்களிடம் எடுபடவில்லை. சிரியன் கிறிஸ்தவ வழிபாடு கொச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீண்டகாலமாக செல்வாக்கோடு திகழ்ந்தது, இலத்தீன் வழிபாடு தென் தமிழக கடலோரங்களில் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்தது இப்போதும் ஆலைய வழிபாடுகளிலும், கல்லறை நிகழ்வுகளிலும்  அதனுடைய  எச்சங்களைக் காணலாம்.    தூத்துக்குடி பரவர்களுக்கும் பிரான்சிஸ்கு சபையினருக்கும் இணக்கமான உறவு இல்லை. இயேசு சபையினருடன் அவர்கள் அந்நியோன்யமாக பழகியதைப் போன்ற நிலை இல்லாத நிலையில் போர்ச்சுக்கல் மன்னன் மூன்றாம் பிலிப்பு மீண்டும் தூத்துக்குடியை இயேசு சபையினரிடம் ஒப்படைகும் படி கோவா  ஆளுநருக்கும் கொச்சி ஆயருக்கும் உத்தரவிட 1621-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்  மீண்டும் இயேசு சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  சுமார் 12 ஆண்டுகளுக்குப்  பின்னர் இயேசு சபையினர் மீண்டும்  தூத்துக்குடி திரும்பியதும் கொண்டாட்டங்களும் வாண  வேடிக்கைகளும் மீண்டும் களை கட்டியது.

முரண்பாடுகள் கூர்மையடைந்து சென்ற நிலையில் முத்துக்குளித்தல் பெரும் இழப்புகளைச் சந்தித்தது. கிபி-1604-ல் தொடங்கி 1612-வரை முத்துக்குளிப்பே நடைபெற வில்லை. முத்துக்குளிப்போரை கிட்டத்தட்ட அடிமைத் தொழிலாளிகளைப் போல கண்காணிக்கக் கோரும் போர்ச்சுக்கீசிய அரசு, அவர்களை கிறிஸ்தவக் குடிகளாகக் கருதக் கோரிய இயேசு சபைகுருக்களுக்கிடையேயான  மோதல் முத்துக்குளித்துறையின் ஆன்மாவாகிய முத்துக்குளித்தலை கெடுத்து நாசமாக்கியதோடு அந்த மக்களை வறுமையிலும் தள்ளியது. பிரச்சனைகள் தற்காலிகமாக  முடிந்து 1621-ல் இயேசு சபையினர்  மீண்டும் தூத்துக்குடிக்கு வந்த போது தூத்துக்குடி ஹென்றி தா குரூஸ் என்ற பெரும் செல்வந்தர் இயேசு சபையினரை வரவேற்று அவர்களுக்கு 1500 குருசாதோக்களை அன்பளிப்பாகக் கொடுத்தார்.  இயேசு சபையினர் பணக்காரரான  ஹென்றி தா குரூஸை பரதவர் சாதித் தலைவனாக நியமிக்க விரும்பினார்கள்.  அது பெரும் கலவரத்தில் முடிந்ததை எல்லாம் பட்டங்கட்டிகள் என்னும் சேப்டரில் காணலாம்.பணமும் செல்வாக்கும் படைத்த பெரிய மனிதர்களை இயேசு சபையினர்  எப்படி செல்வாக்கோடு நடத்தியிருக்கிறார்கள் என்பதை அதில்  காணலாம்.

இந்தத் தாக்குதல் இத்தோடு முடிந்து விட வில்லை. இயேசு சபையினருக்கும் போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாகத்தினருக்கும் பிரான்சிஸ்கு சபையினருக்குமான முரண்பாடு விரிந்து சென்ற நிலையில் இயேசு சபையினரின் பிடியில் தூத்துக்குடி மீண்டும் வந்தாலும்  பவரவர்களுக்கிடையில் அதிகாரங்களைக் கைப்பற்றும் போட்டியாக மாறியது.  இது  பரவர்களுக்கிடையிலான மோதலாக வெடித்தது அந்த மோதலில் பல கொலைகள் நடந்தது. 1629 -ல் கோவாவுக்கு புதிய ஆளுநராக கோம்தே தீ லீனாரஸ் வந்தவுடன் அவரும் இயேசு சபையினரை விரும்பவில்லை. பரவர்களில்  ஒரு பிரிவினர் தூத்துக்குடிக்கு புதிய தளபதியாக கோவா ஆளுநரால் நியமிக்கப்பட்ட சுவராஸ் தி பிரிட்டோ என்பவருடன் இணைந்து கோண்டனர். மதம் ரோமன் கத்தோலிக்க மதமென்றாலும்  சபைகள் வேறு  என்னும் அடிப்படையில் இந்த மோதம் பல ஆண்டுகாலம் நீடித்தது.

சபையினருக்கிடையிலான  மோதல் பரவ மக்களுக்குள் மோதலை உண்டாக்கியது.  1635, 1638  என இது பெரும் கலவரமாக தூத்துக்குடியை தின்றது. இதனால் பெருமளவு பரவர்கள் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்தனர். முத்துக்குளித்துறையில் முத்திலிருந்து கிடைகும்  வருமானத்தை பங்கிட்டு இயேசு சபையினர் பெரும் செல்வத்திலும் ஆடம்பரத்திலும் கொழிப்பதாக எண்ணிக் கொண்டு அதில் பங்குகோருவதில் ஏற்பட்ட தகறாறுதான்  இத்தனைக்கும் காரணம். இயேசு சபையினருகும் போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாகத்தினருக்குமிடையே உருவான மோதலில் பல முறை பரவர்களை போர்ச்சுக்கீசியர்கள் தாக்கினார்கள். பெண்களைக் கவர்ந்து சென்றார்கள், சில நேரங்களில் படகுகளுக்கு தீயிட்டார்கள். இவர்களுக்குள் நிலவிய இந்த முரண்பாடும்  டச்சுக்காரர்கள்  மிக எளிதாக தூத்துக்குடியை ஆக்ரமிக்க  பிரதான காரணமாக இருந்தது.
போர்ச்சுக்கீசிய அரசு நிர்வாகிகளான துறைத் தலைவர்களிடம் பரவர்களை ஆளும் அதிகாரம் செல்வதை இயேசு சபையினர் விரும்பாததையும் அதற்காக அவர்கள் மக்களை குஷிப்படுத்தி போர்ச்சுக்கீசிய  அரசு  நிர்வாகத்திற்கு எதிராக தூண்டி விட்டதையும் புரிந்து கொள்ள  இந்திய, இலங்கையின் டச்சு ஆளுநராக இருந்த வான்கோயனுக்கு டச்சு அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையிலிருந்து பின் வரும் தகவலை அறிந்து  கொள்வது குறிப்பிடத்தக்கது.

‘’ முத்துக்குளித்தலினால் கிடைக்கும் பெரும் பயன்களை அறிந்து இந்திய அரசாங்கம் அதை மேற்பார்வையிடுவதற்கு போர்ச்சுக்கல் மன்னரின் சார்பாக இராணுவ உயரதிகார்களையும் துறைத் தலைவர்களையும் நியமித்தது. தேவாலயங்களையும் அவற்றில் மேலாண் அதிகாரத்தையும் பாதிரியார்களிடமே விட்டு விட்டது. அந்த துறைத் தலைவர்கள் முத்துக்குளித்தலில் இருந்து முறை ஒன்றுக்கு 6,000 டாலர்களை வசூலித்துக் கொண்டு மீதி வருமானத்தை பரவர்களுக்கு விட்டுக் கொடுத்தனர். செல்வந்தர்களாகி ஏராளமான செலவில் மதுபானம் அருந்தி ஆடம்பரமாக வாழ்ந்தனர்  தங்களுக்கு பாதுகாப்பளித்த பாதிரியார்களின் துணையுடன் துறைத் தலைவர்களை மிரட்டினர். அதனால் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்தன. இவற்றை எல்லாம் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியாத காரணத்தால் எல்லா சிற்றூர்களுக்கும் தலமை இட்மாக விளங்கிய அரசருக்கு அரண்மனை ஒன்றை கட்டுவதில் துறைத் தலைவர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் இதனால் தங்களுக்குக் கிடைத்து வரும் ஆதாயங்களையும் வருமானத்தையும் இழக்க நேரிடுமோ என்று அஞ்சிய பாதிரியார்கள் ‘ இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பெரிய இடர்பாடு நேரிடும்’ என்று கூறி எல்லாவகையான குழப்பங்களையும் நிகழ்த்தும் படி மக்களிடம் வலியுறுத்தினர். கோட்டை கட்டி முடிக்கப்படாவிட்டாலும் தூத்துக்குடி புன்னைக்காயலின் இடத்தைப்  பிடித்துக் கொண்டது”   (12)

மன்னார் முத்துக்குளியில் போர்ச்சுக்கீசியர் செல்வம் ஈட்டிய போதிலும் தூத்துக்குடி முத்துக்குளித்தலில் அங்கு நிலவும்  குழப்பங்களால்  போர்ச்சுக்கீசியர்கள் அதிக லாபம் ஈட்ட முடியவில்லை. முத்துக்குளிப்பவர்களுக்கு வரி விதித்து குத்தகை முறையை அறிமுகம் செய்தனர்.இதனால் பெரும் பணக்காரர்களின் கைகளுக்கு   முத்துக்குளிக்கும் தொழில் சென்றது. முத்துக்குளித்தலின் கௌரவும் மரபும் வெறும்  பின்னுக்குப் போய் அவர்கள் விலை கொடுத்து வாங்கப்பட்ட கூலிகளாக மாறினார்கள். ஆனால் திருவிழா நிலைகளில் மாற்றம் இல்லை. நிலமைகள் சீரடையாத   1648- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் நாள் திருவிழா பனிமய மாதா ஆலயத் திருவிழா தொடங்கியது ‘’ அவ்வாண்டு எழுதப்பட்ட இயேசு சபை அறிக்கையில் அருட் தந்தை பல்தசார் டி கோஸ்தா  இவ்வாறு எழுதுகிறார் ‘’  முத்துக்குளித்துறையெங்கும் வாழும் மக்கள் அனைவருமே  ஒன்று சேர்ந்து மிகுந்த பக்தி சிறப்போடு அன்னையின் விழாவினைக் கொண்டாடுகின்றனர். மேலும் தேவ அன்னையின் வாழ்க்கை வரலாறு அவளது புதுமைகள் ஆகியவற்றை விளக்கித் தினந்தோறும் சுதேச (தமிழில்) மொழியில் நாடகங்கள் நடைபெற்றன. பரத கிறிஸ்தவர்கள் இந்நாடகங்களை தங்களுக்குரிய கலைத் திறமைகளோடும் கருத்தைக் கவரும் பாடல்களோடும் மிக அருமையாக நடித்துக் காண்பித்தனர். இத்தகைய பக்தி நாடகங்களில் நடிப்பதில் இவர்கள் நல்ல திறமைசாலிகள்’’

‘’இங்கு புதிதாக ஒரு மாதா சபை ஏற்படுத்தியுள்ளோம். இச்சபையில் மக்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இச்சபை வேகமாக வளர்ந்து பலனளிக்கும் என்பது உறுதி. தூத்துக்குடியைச்  சார்ந்த பட்டங்கட்டிகள்தான் இதில் முதல் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். பட்டங்கட்டி ஒருவர் 100 குருசாதோ தொகையில் அன்னைக்கு ஒரு வெள்ளிச் லுவையை அன்பளிப்பாக கொடுத்துள்ளார். மற்றவர்களும் தங்களால் இயன்ற காணிக்கைகளை வழங்கியுள்ளனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்குள்ளாகவே அன்னையின்  ஆலையம் பொன் வெள்ளி ஆபரணங்களால் நிறைந்து செல்வப்பெருகோடு திகழ்கிறது.  முத்துக்குளித்துறையில் சிதறிக்கிடக்கும் மற்ற ஆலயங்களும் 10  நன் கொடைகளைக் கொண்டு ஆபரணங்கள் நிறைந்து  மிக அழகுடன் உள்ளன. இங்குள்ள கிறிஸ்தவ மக்கள் நம் திருமறையில் நன்கு  பயிற்சி பெற்றுள்ளனர். கீழ்த்திசை நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரிலும் இம்முத்துக்குளித்துறையைச் சேர்ந்த மக்களே  மிகவும் சிறந்தவர்கள்”என்கிறார் தனது அறிக்கையில் .  (13)

போர்ச்சுக்கீசியர்களை தங்களின் மீட்பர்களாக நம்பும் படி அந்த மக்களுக்கு  போதிக்கப்பட்டது. தங்களை வைத்து சபையினரும், அரசு நிர்வாகமும் ஒரு மாபெரும் சூதாட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆடம்பரத்திலும் பகட்டிலும் திளைத்திருந்த அந்த சமூகத்தை சுமார் 125 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் போர்ச்சுக்கீசியர்கள். திருமலை நாயக்கருக்குக் கூட பரவர்களை நேரடியாக தன் கட்டுப்பாட்டினுள் எடுத்துக் கொள்ளும் ஆர்வம் இருந்தது அதற்கான ஒரு சந்தர்ப்பத்திற்காக அவரும் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் கழுகு வந்து கொத்திச் செல்வதைப் போல டச்சுக்காரர்கள் அவர்களை கொத்திச் சென்றார்கள்.

No comments:

Post a Comment