Saturday 2 June 2012

வடுகர்களின் தாக்குதலும், சிதறி ஓடிய கடற்கரைச் சமூகமும் [மீனவ மக்கள் சொல்லப்படாத கதை பாகம்-6]



மதம் மாறிய மக்களின் நிலை.
..............................................................................

‘’ எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மனம் திருப்பப்பட்ட மக்களை கொண்ட கிறிஸ்தவ கிராமங்கள் வழி சென்றோம். நிலம் மிக குறைந்த பயன் தருவதாலும் வெகு மோசமாக இருப்பதாலும் இந்த கிராமங்களில் போர்த்துக்கீசியர் யாரும் வசிப்பதில்லை,இந்த கிராமங்களில் கிறிஸ்தவர்களுக்கு மறைக்கலவி அளிக்க யாரும் இல்லாததால் அவர்களுக்கும் கிறிஸ்தவர்கள் என்று சொல்வதைத் தவிற வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. அவர்களுக்கு திருப்பலி நிறைவேற்ற யாரும் இல்லை. விசுவாச அறிக்கை ஏசு கறிபித்த ஜெபம். அருள் நிறைந்த மரியே ஜெபம், பத்து கட்டளைகள்.ஆகியவற்றை கற்பிக்க யாரும் இல்லை. இந்த கிராமங்களுக்கு நான் வந்த போது இதுவரை திருமுழுக்கு பெறாத எல்லா குழந்தைகளுக்கும் திருமுழுக்கு அளித்தேன் “

மூர்களுடனான யுத்தம் தொடர்பாக சவேரியார் எழுதிய கடிதத்தில்.

’’இப்பகுதிகளில் அண்மையில் மனந்திருத்தப்பட்ட கிறிஸ்தவர்களின் மீது ஆளுநர் பேரன்பு கொண்டிருக்கிறார். மூர்களால் துன்புறுத்தப்பட்டு தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட போது அவர் அவர்களுக்கு பேருதவி செய்தார். இந்த அனைத்து கிறிஸ்தவர்களும் கடலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். அதன் சொத்தை வைத்து மட்டுமே வாழ்கின்றனர்.அவர்கள் மீனவர்கள் அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமான படகுகளை மூர்கள் பிடித்தனர். ஆளுநர் இதைக் கேள்விப்பட்டு தாமே ஒரு படையுடன் சென்று மடக்கிப் பிடித்து பலரையும் கொன்று அவர்கள் எல்லோரையும் ஓட வைத்தார்.ஒன்று கூட இல்லாமல் எல்லா படகுகளையும் இந்நாட்டு கிறிஸ்தவர்களிடமிருந்து கைப்பற்றியவற்றையும் சேர்த்து பிடித்தார். கிறிஸ்தவர்களின் படகுகளை அவர்களுக்கே திரும்பக் கொடுத்தார். மூர்களிடமிருந்து கைப்பற்றியவற்றை படகு இல்லாத மற்றும் வாங்கவியலாத ஏழைகளுக்குக் கொடுத்தார். இவ்வாறு மறக்க முடியாத பெரும் வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஆண்டவர் அவருக்கு உதவியது போல அதற்கு நன்றிக்கடனாக கிறிஸ்தவர்களுடன் தாராளமாக நடந்து கொண்டார். இப்போது மூர்கள் என்ற பேச்சே இல்லை. அவர்கள் யாரும் தலைதூக்கத் துணிய மாட்டார்கள். அவர்களின் எல்லா தலைவர்களையும் முக்கியமானவ்ர்களையும் ஆண்டவர் கொன்றார் இப்பொழுது  கிறிஸ்தவர்கள் ஆளுநரை தங்கள் தந்தையாகவும் அவர் இவர்களை கிறிஸ்துவின் குழந்தைகளாகவும் நினைத்து வாழ்கின்றனர். இந்த புதிய செடிகளை என்னிடம் எவ்வளவு பக்குவமாக ஆண்டவராகிய கடவுள் கொடுத்துள்ளார் என்பது அவருக்குத் தெரியும் “

என்னவிதமான உரிமையை சவேரியார் மீன்பிடி பரதவர் மக்கள் மீது கொண்டிருந்தார் என்பதற்கு கடிதங்களிலுருந்த இந்த பாகங்களை எடுத்துக் கொள்ளலாம்.  ‘’ ஒரு நல்ல தந்தை தம் தீய மைந்தர்களிடம் நடந்து  கொள்வது  போல இந்த மக்களுடன் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். என்று மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் மத்தியில் நிலவும் பல தீமைகளைக் கண்டு மனம் தளர்ந்து விட வேண்டாம் ஏனெனில் கடவுளும் இந்த மக்களால் பல நிபந்தனைகளுக்கு ஆளாகிறார். அதற்காக இவர்களை அழித்தொழிக்கும் ஆற்றல் அவரிடமிருந்தாலும் அப்படி அவர் செய்யவில்லை அவர்களது வாழ்வுக்கு தேவையான அனைத்தையும் அவர்களுக்கு வழங்காது மறுக்கக்கூடிய வல்லமை அவருக்கு இருந்தாலும் அவர்களைப் பாதுகாத்து பராமறிப்பதை அவர் ஒரு போதும் நிறுத்தவில்லை “

’’நான் வரும்வரை அங்கு பணி புரிய ஒரு பணியாளரை அனுப்பி வைக்கிறேன். கள் குடிக்கும் பெண்களைப் பிடிக்கும் இப்பணியாளருக்கு வெகுமதியாக ஒரு பெண்ணுக்கு ஒரு பணம் வீதம் கொடுக்கிறேன். அவர்கள் மூன்று நாட்களுக்கு தனிமையில் அடைக்கப்பட வேண்டும். புன்னைக்காயலில் கள் குடிப்பது தொடர்கிறது என்று கேள்விப்பட்டால் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் இதை ஊரார் அனைவருக்கும் சிறப்பாக பட்டங்கட்டிகளுக்கும்  (சாதித் தலைவர்களுக்கும் அறிவித்து விடுங்கள்.

ஆறு நாள் இடைவெளியில் எழுதப்பட்ட இரண்டாவது கடிதத்தில்

” மக்களோடு மிகவும் நல்ல முறையில் பழக வேண்டும் அவர்களால் சிறப்பாக அன்பு செய்யப்படுவதுதான் கடவுளுக்குச் செய்யும் மிகப்பெரிய பணியாகும் அவர்கள் செய்யும் கூற்றங்களை மிகவும் பொறுமையாக பொறுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் இதுவரை நல்லவர்களாக இல்லாவிட்டாலும், உரிய காலத்தில் நல்லவர்களாக இருப்பார்கள்.

சவேரியார் கடற்கரைக்கு வந்த இரண்டாவது ஆண்டிலிருந்தே வடுகர்கள் பரவர்களை தாக்கத் தொடங்கினார்கள், அது பல்வேறு காலக்கட்டங்களில் தொடர்கிறது. என்பதற்கான சான்றுகள் அவருடைய கடிதங்களில் உள்ளன. அப்படி என்றால் பரவர்கள் மதம் மாறியிருந்த இந்த பத்தாண்டுகளில் அவர்கள் எவராலும் தாக்கப்படவில்லையா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆனால் 16-ஆம் நூற்றாண்டில்  திருவிதாங்கூரைத் தவிற ஒட்டு மொத்த தென்னிந்தியாவையும் கைப்பற்றியிருந்த விஜயநகரப் பேரரசு கடற்கரையைப் பகுதிகளில் கவனம் செலுத்த வில்லை. அவர்கள் பெருமளவு மூர்களிடமிருந்து வரும் திறைகளைப் பெற்றுக் கொண்டு முத்துக்குளிக்கும் உரிமையில் நேரடியாக தலையிடாமல் இருந்து வந்தனர். போத்துக்கீசியர் வந்து மூர்களை விலக்கி முழுமையாக முத்துக்குளித்துறையை கைப்பற்றும் போதே விஜயநகர மன்னர்களுக்கு திறை வசூலித்துக் கொடுக்கும் குறுநில மன்னரான வெட்டும் பெருமாள் பரவர்களைத் தாக்கத் தொடங்குகிறார்.

புதிய எதிரிகள். -உன்னி கேரள வர்மன், வெட்டும் பெருமாள்.
....................................................................................................................................................

திருவிதாங்கூர் மன்னனின் நண்பனான உன்னி கேரளவர்மனுக்கும். வெட்டும் பெருமாளுக்கும் தொடர்ந்து பிரச்சனை இருந்து வந்தது. உன்னி கேரளவர்மனுக்கு போர்த்துக்கீசியரின் உதவி தேவைப்பட அவர்கள் பிரான்சிஸ் சேவியரை நாடினார்கள். போர்த்துக்கிசியரின் உதவியைப் பெற்றுக் கொடுத்தால் சேவியரின் மதப்பரப்பலுக்கு உதவுவதாக உன்னி சொன்னார். அதனால் கொச்சியில் இருந்த போர்த்துக்கீசிய ஆளுநரைச் சந்திக்க சேவியர் 1544-ல் மார்ச் மாதம் வாக்கில் பயணம் மேற்கொண்டார். உன்னி கேரள் வர்மனின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் கரையோரப் பகுதிகளாக இருந்த காயல்பட்டினம், கொம்புதுறை, வீரபாண்டியன்பட்டிணம், திருச்செந்தூர், ஆலந்தலை, குலசேகரப்பட்டினம், மணப்பாடு, பெரியதாளை, உவரி, கூத்தங்குளி, இடிந்தகரை, பெருமணல், குமரி முட்டம், கன்னியாகுமரி என பெரும்பலான பரவர்கள் வாழ்ந்த பெருந்தொகையான கிராமங்கள் இருந்தன. கிறிஸ்தவ மதத்திற்கான பரப்பலுக்கு உன்னி கேரளவர்மனின் உதவியும் திருவிதாங்கூர் மன்னனின் உதவியும்  சவேரியாருக்கு புவியியல் ரீதியாகவே தேவையாக இருந்ததால் அவர் உன்னி கேரள வர்மனுக்கு உதவினார். அந்த மன்னனுக்காக போர்த்துக்கீசிய தளபதியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினார். சவேரியாரின் சிபாரிசில் போர்த்துக்கீசிய ஆளுநர் அல்போன்சோ டி சூசாவின் உதவி உன்னிக்கு கிடைக்க கோபமடைந்த வெட்டும் பெருமாள் கிறிஸ்தவர்களைத் தாக்கினான். சவேரியார் கிறிஸ்தவ மீனவர்களை உன்னிகேரள வர்மனின் எல்லைப் பகுதிக்கு இடம் பெயருமாறு கூற இடம் பெயரவேண்டும், இடம் பெயர வேண்டாம் என்ற பிளவு பரவர்களுக்குள் ஏற்பட்டிருக்கிறது. அப்படி இடம் பெயற விரும்பாத மக்களை போர்த்துக்கீசிய தளபதி  கோஸ்மி டி பாய்வா ஆதரித்திருக்கிறார் .ஏனென்றால் அவர் வெட்டும் பெருமாளுக்கு குதிரைகள் விற்று கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் பிரான்சிஸ் சேவியர் உன்னி கேரள வர்மனை ஆதரிக்க இவரோ வெட்டும்பெருமாளுக்கு குதிரை விற்றார்.

கிறிஸ்தவ பரவர்கள் மீதான வடுகர்களின் தாக்குதலும், சிதறி ஓடிய கடற்கரைச் சமூகமும்.
............................................................................................................................................
பரவர்கள் மதம் மாறிய 1532 - இல் சேவியர் கடற்கரையில் வாழ்ந்த 1542-ல் பழைய எதிரிகள் மீண்டும் பரவர்களைத் தாக்கினார்கள். தெலுங்கு  நாயக்க மன்னர்களின் வழித்தோன்றல்களான வடுகர்கள் எனப்படும் படுகர்கள் நாயக்க மன்னர்களுக்கு வரி வசூலித்துக் கொடுப்பவர்களாக இருந்தனர். வரி கொடுக்க மறுக்கும் மக்களின் இடங்களை கொள்ளையடிக்கவும் கொடூர சித்திரவதை புரிவதிலும் இவர்கள் கைதேர்ந்தவர்கள் ,, (திருநெல்வேலிச் சரித்திரம்- கால்டுவெல்-பக்கம்-106)  போர்த்துக்கீசியரின் குடி மக்களாக சிறப்புரிமை பெற்று கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்ட பரவர்கள் மீது மிகுந்த சினம் கொண்டார்களாக நாயக்க மன்னர்கள் இருந்து தொடர்ந்து தாக்கி வந்தனர். இந்த வடுகப்படைகளிடம் இருந்து பர்வார்களைக் காக்க திருவிதாங்கூர் மன்னனிடம் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயர்சியை பிரான்சிஸ் சவேரியார் மேற்கொண்டார். ஆனால் படுகர்கள் திருவிதாங்கூரையே தாக்கும் அளவுக்கு வலிமை பெற்றவர்களாக இருந்தனர். நாயக்க மன்னர்கள் தொடர்ந்து பரவர்களைத் தாக்கக் காரணம் அவர்கள் போர்ச்சுக்கீசியர்களாக தேசிய மாற்றம் அடைந்ததே காரணம் என்கிறார்.  இதனால்தான் நாயக்க மன்னர்கள் பரவர்களை திரும்பத் திரும்பத் தாக்கினார்கள். இந்த தாக்குதல் டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றிய பின்னரும் தொடர்ந்தது. போர்ச்சுக்கீசியருக்கு வரியோ கப்பமோ கொடுக்காமல் அதை தங்களுக்கே வழங்க வேண்டும் என்பது நாயக்க மன்னர்களின் கோரிக்கை. (திருநெல்வேலி சரித்திரம்-பக்கம்-109)

1544-ல் ஜூன் மாதம் வடுகப்படைகள் கிறிஸ்தவ மீனவர்களை முற்றுகையிட்டன, அவர்கள் கொள்ளையடித்தார்கள், சூறையாடினார்கள். தரைவழிப்பாதைகள் எல்லாம் அடைபட்ட நிலையில் சவேரியார் அவர்களுக்கு உதவி 20 படகுகளில் போவதாக மன்சிலாவுக்கு எழுதுகிறார் இப்படி ,  ’’சனிக்கிழமை நான் மணப்பாட்டிற்கு வந்தேன், கன்னியாகுமரியில் இருக்கும் கிறிஸ்தவர்கள் பற்றித் துயரச் செய்திகள் கிடைத்துள்ளன. வடுகர்கள் அவர்களைச் சிறைப்பிடித்துள்ளனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கிறிஸ்தவர்கள் கடலில் உள்ள பாறைகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் பசியாலும் தாகத்தாலும் மடிகின்றனர். நான் இன்று இரவு மணப்பாட்டிலிருந்து அவர்களுக்கு உதவி செய்ய 20 தோணிகளில் பயணம் செய்வேன். ”

ஆனாலும் இந்த மீனவர்கள் தாக்கப்பட்ட காலத்திலும் கூட தாக்குதல் நடைபெறாத இடங்களில் அவர் திருமுழுக்குக் கொடுக்க துறவிகளை ஊக்குவிக்கிறார். கொம்புதுறைக்குச் சென்று கோவில் கட்ட உத்தரவிடுகிறார். கன்னியாகுமரி மீனவர்களுக்கு உதவுவதாக கடிதம் எழுதிய பின்னர் 14 நாட்களுக்குப் பின்னர் ஜூன்- 30-ல் மணப்பாட்டிலிருந்து பிரான்சிஸ் மன்சிலாவுக்கு எழுதிய கடிதத்தில் கன்னியாகுமரி கிறிஸ்தவர்களுக்கு உதவ அவர் மேற்கொண்ட பயணம் கடல் காற்றால் தோல்வியில் முடிந்ததால் திரும்பி வந்ததாகவும், காற்றின் வேகம் குறைந்த பின்னர் அவருக்கு உதவப் போவதாகவும் எழுதுகிறார்.

மீனவர்களுக்கு உதவ முடியாமல் போன வேதனையை சவேரியார் இப்படிப் பதிவு செய்கிறார்  //இந்த உலகத்திலே அதிக வேதனை தரக்கூடிய விஷயம் உண்டென்றால் அது துர்பாக்கியசாலிகளான கிறிஸ்தவர்களின் துன்பங்களைக் கண்களால் பார்ப்பதேயாகும். ஒவ்வொரு நாளும் அவர்களின் பலர் களவாடப்பட்டவர்களாய், ஆதரவற்றவர்களாய், உணவும் உடையும் இல்லாதவர்களாய் மணப்பாடு வந்த வண்ணம் உள்ளனர் , இவ்வகை துர்ப்பாக்கியசாலிகளுக்கு உதவும் படி பட்டங்கட்டிகளுக்கு கடிதம் எழுதுகிறார்.

நிலமை சீரடைந்த பின்னர் ஜூலை மாதம் முழுவதையும் கன்னியாகுமரி மீனவர்களோடு செலவிட்டதாகவும் தன் புதுமையால் வடுகர்களை துரத்தியகாதவும் இன்னமும் கன்னியாகுமரி மாவட்ட மக்களிடம் செவி வழிக்கதைகளாகவும் குருசடிகளில் நன்றி மன்றாட்டுக்களாகவும் சொல்லப்படுகின்றன.

தொடர்ந்து நடந்த தாக்குதல்கள்.
.....................................................................................

‘’ வடுகர்களால் கொள்ளையடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து தப்பி ஓடிய கிறிஸ்தவர்களைச் சந்திக்க குமரி முனைக்குத் தரை வழிப் பாதையாகச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சி மிகவும் பரிதாபமானது சிலருக்கு உணர்பதற்கு எதுவும் இல்லை. வயதான சிலரால் தப்பித்து வரமுடியவில்லை. சிலர் இறந்து விட்டனர். வழியிலேயே குழந்தைகளை ஈண்டுத்த தம்பதியரை சிலர் நான் பார்த்தது போன்று நீங்களும் பார்த்திருந்தால் உங்களுடைய இரக்கத்தை இன்னும் அதிகமாகத் தூண்டியிருக்கும் மிகப் பரிதாபமான காட்சிகளும் இருந்தன. எல்லா ஏழைகளையும் மணப்பாட்டிற்கு வர ஆணையிட்டுள்ளேன். எனவே இந்தக் கிராமத்தில் நிறைய ஏழைகள் இருக்கிறார்கள். இந்த ஏழைகள் மீது இரக்கம் காட்டப் பணக்காரர்களின் மனதைத் தூண்டுமாறு ஆண்டவரிடம் கேளுங்கள் “

வடுகர்கள் காட்டுக்குள் தப்பி ஓடிய கிறிஸ்தவர்களை தாக்கிக் கொள்ளையடித்தனர். என்றும் ஒரு கிறிஸ்தவரையும் ஒரு புறச் சகோதரர் எழுதுயுள்ளார். எல்லா பக்கமிருந்தும் மோசமான செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன.

வடுகர் படைகளான விஜயநகரப் பேரரசின் படைகள் 1532,1544,1546, 1547 ஆகிய காலங்களில் தென்னிந்தியாவைக் கைப்பற்ற நடத்திய போரின் போதெல்லாம் கடலோரப்பகுதிகளில் கிறிஸ்தவ மீனவர்களும் போர்த்துக்கீசியர்களும் தாக்கப்பட்டனர். கயத்தாறில் ஆட்சி செய்த வெட்டும் பெருமாள் 1531- முதல் 1551 வரை தான் ஆட்சி செய்த காலம் முழுக்க தூத்துக்குடி உள்ளிட்ட கடலோரப்பகுதிகளை தாக்கினான். இந்தத் தாக்குதலும் கொள்ளைகளும் பெருமளவு பொருட்சேதத்தை கிறிஸ்தவ மீனவ மக்களுக்கு உருவாக்கியது. அதனுடைய விளைவுகளாக கடலோர மக்கள் பல இடங்களுக்கும் சிதறி ஓடினார்கள்.  தூத்துக்குடிப் பகுதியைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் அப்பகுதியைச் சுற்றியுல்ள தீவுகளில் தஞ்சமடைந்தனர். கோசல் ஏரித் தீவு, வான் தீவு, பாண்டியன் தீவு, முயல்தீவு, என இந்த தீவுகளில் மக்கள் தஞ்சமடைந்திருந்தனர்.  போர்த்துக்கீசிய தளபதியாக தூத்துக்குடியில் தங்கியிருந்தவர் கோஸ்மே டி பாய்வா அவர் மீன்பிடிக்கரையில் 1543 - 1545 இருந்த போது கோஸ் மே டி பாய்வா கயத்தாறு மன்னன் வெட்டும் பெருமாளுக்கு குதிரைகளை விற்றதால் சேவியருக்கும் தளபதி கோஸ் மே டி பாய்வாவுக்குமிடையில் கருத்து வேறு பாடு எழுந்தது.சவேரியாரோ உன்னி கேரள வர்மனுக்கு ஆதரவாக இருந்தார். 1544-ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வடுர்களின் தாக்குதலில் தளபதி கோஸ் மே டி பாய்வாவின் வீடும் படகும் கொளுத்தப்பட அவர் தீவுகளுக்கு மக்களுடன் தப்பிச் சென்றார்.

தீவுகளில் தஞ்சமடைந்த தூத்துக்குடி மக்களை திரும்ப அழைத்தல்.
.......................................................................................................................................................

”வெட்டும்பெருமாள் மற்றும் அவரது குதிரைப் படையினரின் துன்புறுத்தலால் அந்த மக்கள் பசி தாகத்தால் இறக்க விட்டு விடாதீர்கள். பசியாலும் தாகத்தாலும்  செத்துக் கொண்டிருக்கும் தூத்துக்குடி கிறிஸ்தவர்களை உங்களுடன் சேர்த்து  அந்தத் தீவுகளில் இருந்து அழைத்து வருவதற்குத் தேவையான தோணிகளை தயாராக வைத்திருக்கும் படி புன்னைக்காயல், கொம்புதுறை பட்டங்களுக்கு ஓலை அனுப்புகிறேன்.உண்ண உணவும் குடிநீரும் எடுத்துச் செல்வதை உறுதி செய்து கொள்ளுங்கள் “

இந்த தாக்குதல்களுக்கிடையில் உன்னி கேரளவர்மனின் அளுகைக்குட்பட்டிருந்த பகுதிகளில் திருமுழுக்கு பணிகள் வேகமாக நடந்தன. ஒரு பக்கம் வடுகப்படைகள் தொடர்ந்து கிறிஸ்தவ மீனவர்களைத் தாக்க உன்னி கேரள வர்மன் மற்றும் அவரது நட்பு மன்னரான திருவிதாங்கூர் மன்னரும் சவேரியாரின் உதவிக்கு நன்றிக்கடனாக கோவில்கள் கட்டவும்,. திருமுழுக்கு அளிக்கவும் உதவினார்கள்.

”தூத்துக்குடி கிறிஸ்தவர்கள் கைவிடப்பட்டு இருப்பதாலும்,அவர்களைப் பற்றி அக்கறை கொள்பவர்கள் யாரும் இல்லாததாலும்  அவர்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். நம் ஆண்டவரது அன்பின் நிமித்தம் அங்கு என்ன நடக்கிறது என்று தெரியப்படுத்துங்கள். புன்னைக்காயல், கொம்புதுறையில் உள்ள தோணிகளை உடனடியாக இன்னும் சில மணி நேரங்களில் எடுத்துக் கொண்டு அந்தத் தீவுகளுக்குச் சென்று அங்குள்ள மக்களைக் கொம்புதுறைக்கும், புன்னைக்காயலுக்கும், திருச்செந்தூருக்கும், கொண்டு வாருங்கள். இதற்காகப் புன்னைக்காயலில் உள்ள எல்லா தோணிகளையும் எடுத்துக் கொள்ளுங்காள். கொம்புதுறையில் உள்ள தொணிகளை உங்களைத் தொடர்ந்து வரக் கட்டளையிடுங்கள்.இது கடவுளுக்காக நீங்கள் செய்யும் பணி”

போர்த்துக்கீசியர்களின் ஆதரவு உன்னி கேரளவர்மனுக்கு கிடைத்த காலத்தை முக்குவ மக்களை கத்தோலிக்கத்தின் பால் ஈர்க்க பயன்படுத்திக் கொண்டார் பிரான்சிஸ் சவேரியார். உன்னி கேரள வர்மன் நாட்டின் கிறிஸ்தவர்கள் அமைதியாகவும் பாதுகாப்பகவும் சில காலம் வாழ்ந்திருக்கிறார்கள். பின்னர் கொல்லம் மற்றும் திருவிதாங்கூர் மன்னர்கள் போர்த்துக்கீசியரால் கைவிடப்பட்ட நிலையில் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட தென்பகுதியை அவர்கள் விஜயநகரப் பேரரசுக்கு தாரை வார்த்து விட்டு அவர்களுக்கு திறை செலுத்தும் அரசுகளாக மாற வேண்டியிருந்தது. இதனால் மலபார் கரையில் மதமாற்றத்திற்கு உன்னி கேரளவர்மனும், திருவிதாங்கூர் மன்னனும் தடை விதித்தனர்.

சவேரியார் கடலோரத்திற்கு வந்த புதிதில் அவருடன் பெத்ரோ கொன்ஸ்சால்வஸ் என்ற பாதிரியாருடன் இணைந்து 1536 - 1537-ல் பரவதர்வகளுக்கு திருமுழுக்கு அளித்தனர் 1542 -ல் அவர் முத்துக்குளித்தூறையை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை சவேரியாரிடம் வழங்கினார். மணப்பாட்டிற்கும் கன்னியாகுமரிக்கும் இடையே உள்ள எட்டு கிராமங்கள் புதுக்கரை, பெரியதாழை, உவரி, கூத்தங்குளி, இடிந்தகரை, பெருமணல், முட்டம், கன்னியாகுமர் ஆகிய ஊர்களில் இதே காலக்கட்டத்தில் தொடர்ந்து திருமுழுக்கு நடந்து வந்தது. தூத்துக்குடி முத்துக்குளித்துறையில் உள்ள முக்கிய துறைமுக நகரம் 1644-ல் 8,270 பேர் பரவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். வேம்பாரில் -1644 -ல் 1,300 கிறிஸ்தவர்களும், 1914-ஆம் ஆண்டு 4,744 கிறீஸ்தவர்களும் இருந்தனர். பெரியதாளையில் 1644-ல் 1,200 கிறீஸ்தவர்களும் 1914 -ஆம் ஆண்டு 2,705 கிறீஸ்தவர்களும் இருந்தனர்.

ஒரு குடியேற்ற முயற்சியின் தோல்வி?
..............................................................................................

கன்னியாகுமரிலிருந்து இராமேஸ்வரம் வரையிலும் வாழ்ந்த பரவர்கள் கன்னியாகுமரியில் இருந்து கேரளக்கரையோரத்தை அண்டி வாழ்ந்த முக்குவர்கள் என இந்த ஒரு பெரும் சமூகங்களும் ரோமன்கத்தோலிக்க கிறிஸ்தவத்தைத் தழுவினார்கள். பரவர்கள் வெட்டும் பெருமாளாலும், நாயக்க மன்னர்களாலும் தொடர்ந்து தாக்கப்பட்டும், கொள்ளையிடப்பட்டும், கொல்லப்பட்டும் வாழ்ந்த அதே சூழலில் திருவிதாங்கூர் ஆளுகைக்குட்பட்டிருந்த முக்குவர்கள் ஒப்பீட்டளவில் அமைதியான வாழ்வைப் பெற்றிருந்தனர். திருவிதாங்கூர் மன்னருக்கு போர்ச்சுக்கீசியரின் ஆதரவு இருந்த சூழலில் வெகுவேகமாக அங்கும் மதமாற்றம் நடந்தது.  போர்ச்சுக்கீசியர் கீழைக்கடலோரத்தில் கால் பதித்த போது அவர்கள் புன்னைக்காயலையே தலைமையிடமாகக் கொண்டனர். அதுதான் இயேசு சபைத் துறவிகளின் தலைமையமாகவும் இருந்தது. தூத்துக்குடியை விட புன்னையாக்காயலே அப்போது முக்கியத்துவம் பெற்றிருந்தது. நாயக்க மன்னர்களின் தொடர்தாக்குதலாலும், டச்சுக்காரர்களுடனான போரினாலும் புன்னைக்காயலை தொடர்ந்து பேண முடியாத நிலையில் பரவர்கள் செரிவாக வாழ்ந்த தூத்துக்குடியை தலைமையிடமாக மாற்றிக் கொண்ட இயேசு சபை பாதிரியார்கள். முப்பது கிராமங்களில் நிம்மதியில்லாமல் தாக்குதல் அச்சத்தோடு வாழ்ந்த பரவர்களை ஏழு ஊர்களில் குடியேற்றினார்கள். வைப்பாறு, வேம்பாறு, தூத்துக்குடி, புன்னைக்காயல், வீரபாண்டியன் பட்டிணம், திருச்செந்தூர், மணப்பாடு. ஆகிய அந்த ஏழு ஊர்களுமே ‘ஏழு கடற்றுறை” (இடியின் ரகசியம்- எஸ். வெனன்சியூஸ்.-பக்கம்-14) என்று அழைக்கின்றனர்.

தாக்குதல் அச்சம் சூழ்ந்த நிலை தென்னிந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் இதுதான் நிலை. இலங்கை கரையோரத்தில் போர்ச்சுக்கீசியரால் மத மாற்றம் செய்யப்பட்ட கரையாரையும், முக்குவர்களையும், திமிலர்களையும் யாழ்பாணத்தை ஆண்ட ஜெகராஜசெகரன் என்கிற முதலாவது சங்கிலி (1519 - 1561) மன்னன் தாக்கினான். மதம் மாற்றம் செய்யப்பட்ட மக்கள் மன்னாரில் படுகொலை செய்யப்பட்டதை வரலாறு மன்னார் படுகொலைகள் என்று பதிவு செய்துள்ளது. மன்னாரில் வசிக்கும் முக்குவர்களுக்கு திருமுழுக்கு அளிக்க 1544 -ஆகஸ்டில் மன்சிலாஸ் என்ற பாதிரியாரை இலங்கைக்கு அனுப்புவதாக இருந்தார் சவேரியார். ஆனால் வெட்டும் பெருமாள் பரவர்களைத் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் மன்சிலாலில் பயணத்தை தள்ளிப் போடச் செய்வதோடு உரிய ஏற்பாடுகளைச் செய்த பின்னர் செல்லலாம் எனவும் அறிவுறுத்துகிறார்.  ‘’ நீங்கள் மன்னாருக்குச் சென்று கரியப்பட்டணத்துக் கிறிஸ்தவர்களுக்கு திருமுழுக்கு அளித்து அதன் மூலம் ஆண்டவருக்கும் மக்களுக்கும் முதலியாருக்கும் சிறப்பான பணி செய்ய முடியும் ஏனென்றால் நாகப்பட்டணத்து தளபதிக்கு மன்னார் தீவுகளின் உரிமையாளரான யாழ்பாணத்து மன்னரிடம் மிகுந்த செல்வாக்கு உண்டு. அவர் உங்களுக்கு ஆதரவாக மன்னரிடம் செயல்படுவார். வடுகர்களின் தாக்குதலின்றி அந்தப் பகுதி பாதுகாப்பாக இருக்கிறதா? என்று ஒரு ஆள் மூலம் செய்தி அனுப்பினால் பணத்துடன் ஒரு ஓலையுடன் மன்னாரில் நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்ற அறிவுரைகளுடனும் பிரான்சிஸ் கோயல்கோவை உங்களிடம் அனுப்புவேன்// தூத்துக்குசியில் இருக்கும் மன்சிலாவுக்கு புன்னைக்காயலிலிருந்து ஆகஸ்ட் 29-1544 - பக்கம்- 45, 49.என்று எழுதுகிறார். ஆனால் யாழ்பாணத்து மன்னரின் செயல்கள் சவேரியாரின் கனவுகளைத் தகர்க்க யாழ்பாண மன்னனை தண்டிப்பது தொடரபாக ஆளுநரைச் சந்திக்க முடிவு செய்கிறார். பக்கம் -72, 1544 - டிசம்பர் 18, புன்னைகாயலில் இருக்கும் மன்சிலாவுக்கு கொச்சியிலிருந்து சவேரியார் எழுதிய கடிதத்தில்) மூர்கள், வெட்டும் பெருமாள்,நாயக்க மன்னர்களின் தாக்குதலில் இருந்து மீனவர்களைக் காக்க ஏழு ஏழு கடற்றுறை கிராமங்களை உருவாக்கியது போல யாழ்பாணத்தில் உள்ள ஒரு தீவில் சகல மீனவர்களையும் பாதுகாப்பாக குடியேற்றும் முயற்சியும் சவேரியாரால் முன்னெடுக்கப்பட்டது. ” நமது ஆண்டவராகிய கடவுளின் சேவைக்கு மிகவும் உதவக்கூடிய, நீண்டகாலமாக நினைவில் இருக்ககூடிய ஒரு செயலை ஆளுநர் செய்யப் போகிறார். பல்வேறு இடங்களில் வசிக்கும் எல்லா கிறிஸ்தவர்களையும் ஒன்று சேர்த்து ஒரே தீவில் வைக்கவும் அவர்களுக்கு ஆவன செய்ய மற்றும் நீதியை நிலை நாட்ட ஓர் அரசரை நியமிக்கவும் உள்ளார். அத்தோடு கூட அவர்களுக்கு ஆன்ம பாதுகாவலராக ஒருவரையும் கொடுக்க உள்ளார் “(ரோமில் உள்ள தந்தை லயோலா இஞ்ஞாசியாருக்கு தூத்துக்குடியிலிருந்து அக்டோபர், 28,1542 -ல் எழுதிய கடிதம்- பக்கம்  4,5 -   தூய சவேரியார் கடிதங்கள்.)

நீண்டகாலமாகவே இந்த குடியேற்ற முயற்சி நடந்தது ஆனால் யாழ்பாணத்தை போர்ச்சுக்கீசியரால் கைப்பற்ற முடியவில்லை. 1561- ல் பெரும் கொள்ளை நோய்க்கு மக்கள் பலியாக அந்த முயற்சி கைகூடவிலை.

இந்தக் குடியேற்ற முயற்சிகள் எதுவும் கைகூடி வராத நிலையில் பதினேழாம் நூற்றாண்டு வரை அவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் தாங்கள் நாயக்க மன்னர்களின் குடிமக்கள் இல்லை என்று ஒட்டு மொத்த மக்களும் கடற்கரையை விட்டு இடம்பெயர்ந்து தீவுகளில் தஞ்சமடைந்ததும் உண்டு. ஆனால் அவர்கள் ஒரு தலைமையற்று தாக்கப்பட்டது அத்தோடு முடிந்து விடவில்லை. போர்ச்சுக்கீசியர்கள் 1532-ல் தூத்துக்குடியில் இருந்து யாழ்பாணத்தை கைப்பற்ற படையெடுத்தனர். 1655 -ல் டச்சுக்காரர்கள் யாழ்பாணத்தைக் கைப்பற்றினார்கள் 1658 - பிப்ரவரி முதல் வாரத்தில் டச்சுத் தளபதி ரிஜ்க்லோவ் வன்கோவன்ஸ் நீர்கொழும்பில் இருந்து ஒரு பெரும்படையுடன் தூத்துக்குடிக்கு எதிரே முகாமிட்டிருந்தார். போர்ச்சுக்கீசியரின் ஆட்சி அத்தோடு முடிவுக்கு வந்து டச்சுக்காரர்கள் தூத்துக்குடியை கைப்பற்றினார்கள். 1532 தொடங்கி டச்சுக்காரர்கள் தூத்துக்குடியைக் கைப்பற்றிய காலம் வரையான 126 ஆண்டுகளைக் கடந்து அடுத்த தாக்குதலையும் சுரண்டலையும் துவங்கினார்கள் டச்சுக்காரர்கள்.

தொடரும்..........

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அருமையான முயற்ச்சி தங்களிடம் இன்னும் தவர விட்ட வரலாறுகளை அழிந்து போன பரதவ இன அரச மரபுகளையும் பரதவர்களின் வாழ்வியலையும் பதிவேற்றுமாறு கேட்டு கொள்கிறேன்.
    எனது வாழ்த்துக்கள்!!!!!!!!

    ReplyDelete